துபாய்: தொழில் அதிபர்களை இன்று சந்தித்து பேசுகிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இங்கிலாந்து, அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்றடைந்தார்.

Update: 2019-09-09 01:51 GMT
துபாய்,

தமிழகத்தை தொழில்துறையில் வளர்ச்சி மிகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் நகரம் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக கடந்த மாதம் 28-ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விமானம் மூலம் துபாய் வந்தடைந்தார்.  துபாய் நகரில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட பின்னர் அமீரகத்தில் உள்ள இந்திய வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.தொடர்ந்து முக்கிய தொழில் அதிபர்களை நேரடியாக சந்தித்து பேச இருக்கிறார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து பல்வேறு வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதற்காக சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் துபாயில் முகாமிட்டுள்ளனர். 14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கடைசியாக துபாய்க்கு வந்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு துபாயில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

மேலும் செய்திகள்