உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்த பெண் தலைவர் ஷேக் ஹசீனா: இந்திராகாந்தி, தாட்சரை முந்தினார்

உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்த பெண் தலைவர் என்ற சாதனையை ஷேக் ஹசீனா படைத்தார்.

Update: 2019-09-09 23:53 GMT
டாக்கா,

நீண்டகாலம் நாட்டை ஆட்சி செய்த உலகின் பிரபல பெண் தலைவர்கள் பற்றி ‘விக்கிலீக்ஸ்’ ஆய்வு மேற்கொண்டது. இதில் இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், சந்திரிகா குமாரதுங்கா ஆகியோரை முந்தி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல் 2005-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்னும் பதவியில் நீடிக்கிறார். இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் 11 ஆண்டுகள் 208 நாட்கள் ஆட்சியில் இருந்தார். இந்திரா காந்தி பல்வேறு காலகட்டங்களில் மொத்தம் 15 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தார். சந்திரிகா குமாரதுங்கா இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளில் 11 வருடங்கள் 7 நாட்கள் இருந்துள்ளார்.

ஷேக் ஹசீனா முதல் முறையாக 1996-2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அவர் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிபெற்று, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமராக பதவி ஏற்றார். ஏற்கனவே 15 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், இப்போது 4-வது ஆட்சியில் ஒரு ஆண்டை நெருங்கி, 16-வது ஆண்டில் உள்ளார்.

செயின்ட் லூசியாவை கவர்னர் ஜெனரல் பியர்லெட் லூசி 20 ஆண்டுகள் 105 நாட்கள் ஆட்சி செய்து முதலிடத்தில் இருந்தாலும் அவர் உலகின் பிரபல தலைவராக இல்லை. ஐஸ்லாந்து தலைவர் விக்டிஸ் பின்போகாடோத்திர் (16 ஆண்டுகள்), டோமினிகா பிரதமர் உசெனின் (14 ஆண்டுகள் 328 நாட்கள்), அயர்லாந்து ஜனாதிபதி மேரி மெகாலீஸ் (14 ஆண்டுகள்) ஆகியோரும் பிரபல தலைவர்கள் பட்டியலில் இல்லை.

மேலும் செய்திகள்