அலிபாபா ஆன்லைன் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஜாக் மா ஓய்வு

அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மா தனது பிறந்த நாளான இன்று ஓய்வு பெற்று கொண்டார்.

Update: 2019-09-10 15:24 GMT
பெய்ஜிங்,

கம்யூனிஸ்டு நாடான சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான வர்த்தக சேவையில் புகழ் பெற்றது.  உலகின் மிக பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் என்ற பெருமை பெற்ற இந்நிறுவனம், ஒரு நுகர்வோரிடம் இருந்து மற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்து நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனம் மற்றொரு வணிக நிறுவனத்திடம் பொருட்களை பெறுவது என பலவகையான விற்பனை சேவைகளை அளித்து வருகிறது.

அலிபாபா நிறுவனம் கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த நிறுவனத்தின் தலைவராக சீனாவை சேர்ந்த ஜாக் மா இருந்து வருகிறார்.  அதன் நிறுவனர்களில் ஒருவரான அவர் இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கடந்த வருடம் தனது ஓய்வு அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.  இது முடிவல்ல என்றும் ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்றும் கூறிய ஜாக், கல்வி நோக்கம் சார்ந்த சேவையில் தனது நேரத்தினை செலவிட முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார்.

அவர் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சீனாவின் பணக்கார மனிதரானவர்.  அலிபாபா நிறுவனம் ரூ.34 லட்சத்து 51 ஆயிரத்து 344 கோடி சொத்து மதிப்புடன் உள்ளது.  கடந்த வருடம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 421 கோடி சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பத்திரிகை அவரை சீனாவின் பணக்கார மனிதராக பட்டியலிட்டது.

ஓய்வு அறிவிப்பினை வெளியிட்ட அவர், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேனியல் ஜாங் தனது பதவியை ஏற்றிடுவார் என்றும் நிறுவன இயக்குநராக பதவியில் தொடர முடிவு செய்துள்ளேன் என்றும் அதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த நிலையில், தனது பிறந்த நாளான இன்று அவர் ஓய்வு பெற்று கொண்டார்.  சீனாவில் வர்த்தக சூழ்நிலை சரியில்லாத நிலையில் அவர் ஓய்வு பெறுகிறார் என செய்திகள் வெளியாகின.  இவற்றை மறுத்த ஜாக், கலாசார மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறேன்.  அதற்காக ஓய்வு பெற விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்