ஹவுடி-மோடி நிகழ்ச்சி: உலக அரசியலை நிர்ணயிக்கும் நபராக டிரம்ப் விளங்குகிறார் - மோடி பேச்சு

ஹவுடி-மோடி நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Update: 2019-09-22 17:38 GMT
நியூயார்க்,

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த விழா அங்குள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடக்கிறது. 50 ஆயிரம் இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர்கள், தொழில் முனைவோர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அதிகாரிகள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை அவர்கள், அவரது பெயரை கூறி உற்சாகமாக கோஷமிட்டு வரவேற்றனர்.  நிகழ்ச்சியின் துவக்கமாக, பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்களுடன் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.

'கனவுகளை பகிருங்கள்; ஒளிமயமான எதிர்காலம்' என்ற தலைப்பில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் பங்கேற்க மேடை ஏறிய மோடி, அனைத்து திசைகளிலும் சென்று, இந்தியர்களை நோக்கி கைக்கூப்பி வணங்கினார். மேடையில் இருந்த இந்தியர்களும், ''மோடி... மோடி...'' என உற்சாகமாக கோஷமிட்டனர். இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பங்கேற்றது சிறப்பம்சம்.

பிரதமர் மோடி, அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரையும் சில்வஸ்டர் டர்னர் ஹூஸ்டன் மேயர் வரவேற்றார். உடன் அமெரிக்க எம்.பி.,க்கள் வரவேற்றனர். இந்தியர்கள் பாலிவுட் முறைப்படி மோடியை வரவேற்றனர்.

இந்தியா, அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக அரசியலை கொண்டது.என அமெரிக்க எம்.பி.க்களான டெட் குரூஸ்,ஜான் கார்னின், ஸ்டீனி ஹோயர் தெரிவித்தனர். மேலும்  ‘பிரதமர் மோடி வருகையை நினைத்து பெருமிதம் கொள்கிறது. வரலாற்று மற்றும் கலாச்சாரம் இருதரப்பிலும் ஆழ்ந்த ஒருங்கிணைப்பு பெறுகிறது. ஹூஸ்டன் நகரமே மிகவும் சக்தி பெறுகிறது. இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று தெரிவித்தனர்’. பின்னர் ஹூஸ்டன் நகர சாவியை மோடிக்கு வழங்கினார் மேயர் சில்வஸ்டர் டர்னர். மரியாதை நிமித்தமாக இந்த சாவி அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,  “ உலக அரசியலை, நிர்ணயிக்கும், நபராக, டிரம்ப் விளங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கதாக மாற்றியவர் டிரம்ப். இரு நாடுகளின் வளர்ச்சி உச்சத்தை தொட்டு இருக்கிறது. வெள்ளை மாளிகை உடனான இந்தியாவின் உண்மையான நட்புறவு புது உச்சத்தில் இருக்கிறது” என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன். என் அருமை இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. மோடி மிகச்சிறந்த செயல்களை செய்து வருகிறார். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய மக்கள் கடுமையான உழைப்பாளிகள். இந்திய சமுதாய மக்களுக்காக எங்களது அரசு உழைக்கிறது. ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. டிரம்பை தவிர வேறு சிறந்த நபரை இந்தியா பெற்றிருக்காது” என்று கூறினார்.

மேலும் செய்திகள்