கென்யாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி

கென்யாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 7 மாணவர்கள் பலியாகினர். மேலும் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Update: 2019-09-23 14:58 GMT
நைரோபி, 
 
கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.  இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டிட  இடிபாடுகளுக்குள் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 

தகவலறிந்து விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் கட்டிட  இடிபாடுகளில்  சிக்கி உயிரிழந்த 7 மாணவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 57 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

இந்நிலையில் இந்த கோர சம்பவம் குறித்து பேசிய கென்ய அரசின் செய்தித் தொடர்பாளர் சைரஸ் ஒகுனா, பள்ளிக்கூடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கட்டிடம் இடிந்துள்ளது என கூறினார்.

பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் கென்ய தலைநகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலியான மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்