இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது தவறு -இம்ரான்கான்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.

Update: 2019-09-24 07:02 GMT
நியூயார்க்,

நியூயார்க் நகரில் உள்ள வெளிநாட்டு உறவுகள் மையத்தில் நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அப்போது அவர் 9/11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்தது, பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்டார். 

மேலும் அவர், “1980-களில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. அந்த சமயத்தில் சோவியத் படைகளுக்கு எதிராக போரிடுவதற்காக அமெரிக்கா மற்றும் ஐ.எஸ்.ஐ உடன் இணைந்து போராளிகள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வெளிநாட்டு படைகளுக்கு எதிராக போரிடுவது தான் ஜிகாத் என்று அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. ஜிகாதிகள் பெரிதும் மதிக்கப்பட்டனர். அதன் பின்னர் 1989-இல் சோவியத் மற்றும் அமெரிக்க படைகள் ஆப்கனிஸ்தானை விட்டு வெளியேறின. ஆனால் அந்த போர் குழுக்களுடன் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பு நீடித்து வந்தது.

அதன் பிறகு 9/11 தாக்குதல் நிகழ்ந்தபோது பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய வேண்டிய சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜிகாதிகள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடந்து வருகிறது. 

இதில் அமெரிக்கவுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்பட்டது மிகப்பெரிய தவறு. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தான் இந்த பிரச்சினையை சமநிலையுடன் அணுகியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வர முடியாது எனவும் கடந்த 19 ஆண்டுகளாக எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்