வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா-ஈரான் இடையே இம்ரான்கான் சமரசம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்துக்கு இடையில் இருநாடுகளும் இது குறித்து பேசி தீர்வு காணும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதற்கான சூழல் அமைந்ததாக தெரியவில்லை.

Update: 2019-09-25 23:00 GMT
நியூயார்க், 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை தணிக்க இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்யப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் சமரசம் செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டு கொண்டார். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.

முன்னதாக சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் தங்கள் நாட்டுக்காக ஈரானுடன் பேசுமாறு என்னிடம் கேட்டார். எனவே இந்த விவகாரத்தில் எங்களால் இயன்றதை நாங்கள் சிறப்பாக செய்வோம். டிரம்புடன் பேசியதும் உடனடியாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் அதுபற்றி தற்போது என்னால் விளக்கமாக கூறமுடியாது.

மோதலை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து சமரசத்துக்கு நாங்கள் முயற்சிப்போம். ஏனென்றால் மோதல் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்