நிரவ் மோடி உறவினரான சோக்சி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்; ஆன்டிகுவா பிரதமர் உறுதி

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், இவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக சுமார் ரூ.13 ஆயிரத்து 400 கோடி பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

Update: 2019-09-26 23:15 GMT
நியூயார்க்,

சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் இது தொடர்பாக தனித்தனியே 2 வழக்குகள் பதிவு செய்துள்ளன.

ஆனால், இந்த மோசடி அம்பலமாவதற்குள் நாட்டை விட்டு தப்பிய நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சோக்சி, ஆன்டிகுவா பார்புடா நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள நிலையில், அங்கு இருக்கிறார். அவரை நாடு கடத்திக்கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் டி.டி. நியூஸ் சேனலுக்கு ஆன்டிகுவா பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரவுன் பேட்டி அளித்தார். அப்போது அவர், “ சோக்சி ஒரு மோசடிப்பேர்வழி. அவர் எங்கள் நாட்டு குடியுரிமையை பெற்றிருக்க முடியாது. அவர் சட்டப்படி அனைத்து மேல்முறையீடுகளையும் முடித்தபின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற உறுதியை அளிக்கிறேன்” என கூறினார்.

மேலும் செய்திகள்