லண்டன் சிறையில் ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் அசாஞ்சே உடல்நிலை மோசமடைகிறதா?

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உலகமெங்கும் பிரபலமானவர், ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.

Update: 2019-09-28 23:30 GMT
லண்டன், 

பாதுகாப்புத்துறையின் கணினிகளில் இருந்து ரகசிய ஆவணங்களை எடுக்க அசாஞ்சே சதி செய்தார் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. அவருக்கு அந்த வழக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கும் நிலை உள்ளது.

இதற்கிடையே சுவீடன் நாட்டில் இவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் புகார்களை கூறினார்கள். இதனால் நாடு கடத்தும் சூழ்நிலை உருவானதால் இவர், லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

அங்கு அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் நிபந்தனையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு 50 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு நாளில் 23 மணி நேரம் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், இதன் காரணமாக அவரது நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் அவரது வக்கீல் கார்லஸ் பவேடா கூறி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “23 மணி நேரம் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருப்பதால் அசாஞ்சே எடை குறைந்திருக்கிறார். இதன்காரணமாக அவரது உடல்நிலை மோசமாக பாதித்துள்ளது. மற்றவர்களுடன் கலந்துரையாட அவருக்கு 1 மணி நேரம் மட்டுமே தரப்படுகிறது” என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்