மெக்சிகோவில் பயங்கரம்: ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்து 2 பேர் சாவு

மெக்சிகோவில் ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-09-29 22:45 GMT
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் லாபெரியா என்ற பெயரில் பிரபல பொழுதுபோக்கு பூங்கா இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் வழக்கம் போல் ஏராளமான மக்கள் திரண்டு கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இது போன்ற பொழுதுபோக்கு பூங்காக்களில் ‘ரோலர் கோஸ்டர்’ என்று அழைக்கப்படும் ராட்சத ராட்டினம் மிகவும் பிரபலமானது.

தண்டவாளம் போல் வடிவமைக்கப்பட்ட இரும்பு கம்பியில் சக்கரங்களின் மூலம் நகரும் பெட்டிகள் தரையில் இருந்து மேல்நோக்கி சென்று அதே வேகத்தில் கீழே வருவது தான் ‘ரோலர் கோஸ்டர்’ சவாரி.

அந்த வகையில் லாபெரியா பொழுதுபோக்கு பூங்காவில் பலரும் ‘ரோலர் கோஸ்டர்’ ராட்டினத்தில் ஏறி ‘திரில்’ சவாரி செய்தனர். அப்போது ராட்டினத்தின் கடைசி பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகி சரிந்தது.

இதில் அந்த பெட்டியில் சவாரி செய்தவர்கள் மேலே இருந்து தரையில் விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து பொழுதுபோக்கு பூங்கா உடனடியாக மூடப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்