அமெரிக்க கோர்ட்டில் நெகிழ்ச்சியான காட்சி : கருப்பின வாலிபரை கொன்ற பெண் போலீசுக்கு மன்னிப்பு

அமெரிக்க கோர்ட்டில் கருப்பின வாலிபரை கொன்ற பெண் போலீசுக்கு, சகோதரரை இழந்தவர் மன்னிப்பு வழங்கி ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

Update: 2019-10-04 23:16 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் ஆம்பர் கைகெர் (வயது 31). வெள்ளை இனத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி, தனது வீட்டின் அருகே வசித்து வந்த கருப்பின வாலிபரான போதம் ஜீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் நிறவெறி தாக்குதல் என கூறி அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் அதனை மறுத்த ஆம்பர் கைகெர், போதம் ஜீன் தனது வீட்டில் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக தவறாக நினைத்து, தற்காப்புக்காக அவரை சுட்டதாக கூறினார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை டல்லாஸ் நகர கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஆம்பர் கைகெர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. ஆம்பர் கைகெருக்கு குறைந்தது 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என போதம் ஜீன் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் நீதிபதி டாம்மி கெம்ப் தனது இறுதி தீர்ப்பினை வழங்கினார். அப்போது அவர், ஆம்பர் கைகெருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையே போதம் ஜீன் குடும்பம் சார்பில் கோர்ட்டுக்கு வந்திருந்த அவரது இளைய சகோதரர், நீதிபதி தீர்ப்பை வாசித்த பிறகு நேராக ஆம்பர் கைகெரிடம் சென்று அவரை ஆரத்தழுவி “நான் உங்களை மன்னித்துவிட்டேன். கடவுளும் உங்களை மன்னிப்பார். மற்றவர்களை போலவே உங்களை நான் நேசிக்கிறேன்” என கூறி அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கோர்ட்டில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம், அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. ஆம்பர் கைகெரும் கண்ணீர் சிந்தியபடியே கோர்ட்டில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகள்