ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பயங்கரவாத தலைவர் பலியா?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதலில் பயங்கரவாத தலைவர் பலியானாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-10-09 22:45 GMT
காபூல்,

அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தெற்கு ஆசிய பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆசிம் உமர். இந்தியா, மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் நோக்கில், கடந்த 2014-ம் ஆண்டில் இப்பிரிவு தொடங்கப்பட்டது. அப்போது முதல் இப்பிரிவின் தலைவராக ஆசிம் உமர் இருந்து வந்தார்.

பாகிஸ்தானின் கராச்சியில் கடற்படை பணிமனையில் கடந்த 2014-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இப்பிரிவு பொறுப்பேற்றது. வங்காளதேசத்தில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கொலையிலும் இப்பிரிவுக்கு தொடர்பு உள்ளது. கடந்த 2016-ல் ஆசிம் உமரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஆசிம் உமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த மாதம் 23-ந்தேதி ஹெல்மண்ட் மாகாணத்தின் முஸா காலா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து, அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தெற்கு ஆசிய பிரிவின் தலைவர் ஆசிம் உமர் மற்றும் அவருடன் இருந்த 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எனினும் இந்த தகவலை அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு மற்றும் அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தவில்லை. அதே சமயம் தலீபான் பயங்கரவாதிகள் இது ‘எதிரிகளின் பொய்பிரசாரம்’ என கூறி இந்த தகவலை மறுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்