வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆத்திரம்: மேயரை காரில் கட்டி இழுத்து சென்ற மக்கள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆத்திரத்தில் மக்கள் மேயரை காரில் கட்டி இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-10-11 22:30 GMT
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியாபாசில் உள்ள லாஸ் மார்கரிட்டாஸ் நகர மேயராக இருப்பவர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன் ஹெர்னாண்டெஸ். இவர் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் மேயர் ஜார்ஜ் லூயிசின் அலுவலகத்திற்கு கைகளில் தடிகளுடன் மக்கள் காரில் வந்து இறங்கினர். அலுவலகத்துக்குள் நுழைந்த மக்கள் ஜார்ஜ் லூயிசை வெளியே இழுத்துவந்து சரமாரியாக தாக்கினர். அதன்பின்னரும் அவர்களுக்கு ஆத்திரம் அடங்காததால் மேயரின் கைகளை கயிற்றால் கட்டி அதனை காரில் இணைத்து அவரை சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். எனினும் இதில் மேயர் ஜார்ஜ் லூயிஸ் பெரிய அளவில் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தன்னை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்போவதாக ஜார்ஜ் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்