தொடர் போராட்டம் எதிரொலி: லெபனான் பிரதமர் ராஜினாமா - மக்கள் கொண்டாட்டம்

தொடர் போராட்டம் எதிரொலியாக, லெபனான் பிரதமர் ராஜினாமா செய்தார். இதனை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Update: 2019-10-30 23:10 GMT
பெய்ரூட்,

லெபனான் நாட்டில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்தி பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரிவிதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினர். பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதனால் அரசு அடிபணிந்து வரிவிதிக்கும் முடிவை கைவிட்டது.

ஆனாலும் போராட்டக்காரர்கள், அனைவருக்கும் உணவு, எரிபொருள் உள்பட அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அரசு பதவி விலக வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து, கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் சாத் அல் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர், அதிபர் மைக்கேல் அவுனை சந்தித்து அளித்தார்.இது தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்