ஹாங்காங் போராட்டம்: கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய மர்ம ஆசாமி

ஹாங்காங் போராட்டத்தின் போது மர்ம ஆசாமி ஒருவர் கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-11-04 22:50 GMT
ஹாங்காங்,

ஹாங்காங்கில் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி தொடர்ந்து 6-வது மாதமாக போராட்டம் நடக்கிறது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹாங்காங்கின் டாய் ஹூ மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஜனநாயக ஆர்வலர்கள் வழக்கம் போல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் போராட்டக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த நபர் திடீரென கத்தியை எடுத்து, போராட்டக்காரர்களை சரமாரியாக குத்தினார். இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் வணிக வளாகத்துக்கு வந்திருந்த உள்ளூர் கவுன்சிலரான சியு காயின் என்பவர் தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து, அவரிடம் நியாயம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கவுன்சிலர் சியு காயின் காதை கடித்து, துப்பினார். இதில் அவர் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். அவர் சீன ஆதரவாளராக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் விசாரிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்