சூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்

நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றது.

Update: 2019-11-06 08:24 GMT
சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும்.

தற்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது.

இந்த பகுதியானது அண்டவெளி கதிவீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்கள் நிறைந்த பகுதியாகும்.

கடந்த 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி நாசா அனுப்பிய வாயேஜர் 1 விண்கலம், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 ஆம் தேதி முதன் முறையாக இண்டர்ஸ்டெல்லார் பகுதியை அடைந்தது. அதன் பிறகு தற்போது வாயேஜர் 2 விண்கலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வாயேஜர் 2 விண்கலம் பூமிக்கு தகவல்களை அனுப்ப சராசரியாக 16 மணிநேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலம் இண்டர்ஸ்டெல்லார் பகுதியில் சூரியனின் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்