ஈராக்கில் கடந்த 3ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்குள் 23 போராட்டக்காரர்கள் பலி

ஈராக் நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து 5 நாட்களுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2019-11-09 01:38 GMT
பாக்தாத்,

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.  கடந்த மாதம் 1ந்தேதி தொடங்கி நடந்து வரும் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.

ஈராக்கின் மனித உரிமைகளுக்கான தனி தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அரசின் மந்திரி சபை மறுசீரமைப்பு, தேர்தல் சட்டங்களில் திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என கடந்த அக்டோபர் 1ந்தேதியில் இருந்து நடந்து வரும் நாடு தழுவிய போராட்டத்தில், கடந்த நவம்பர் 7ந்தேதி வரை வன்முறைக்கு 269 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  இது தவிர்த்து ஈராக் பாதுகாப்பு படையினர் உள்பட 8 ஆயிரம் பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து 7ந்தேதி வரை 23 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று போராட்டக்காரர்கள் மற்றும் ஈராக் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 1,077 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  கைது செய்யப்பட்ட 201 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று தெரிவித்து உள்ளது.

ஈராக் அரசானது மந்திரிசபை மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களில் திருத்தம் ஆகியவை கொண்டு வரப்படும் என கூறியுள்ளது.

மேலும் செய்திகள்