இந்தியாவில் ‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகள் மாநாடு - பிரதமர் மோடி யோசனை

‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகளின் முதல் மாநாட்டை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-15 23:30 GMT
பிரேசிலியா,

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசுகையில், புதிய யோசனை ஒன்றை முன்வைத்தார்.

அவர் பேசியதாவது:-

நிலையான தண்ணீர் நிர்வாகமும், துப்புரவு பணியும் நகர்ப்புற பகுதிகளில் முக்கியமான சவாலாக இருக்கிறது. எனவே, ‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகளின் முதலாவது மாநாட்டை இந்தியாவில் நடத்த நான் விரும்புகிறேன்.

மேலும், ‘பிரிக்ஸ்’ டிஜிட்டல் மாநாட்டையும் இந்தியா நடத்தும். இந்தியா, சமீபத்தில் ‘பிட் இந்தியா’ இயக்கத்தை தொடங்கியது. எனவே, உடல் ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவை தொடர்பாக ‘பிரிக்ஸ்’ நாடுகளிடையே கருத்து பரிமாற்றம் அதிகரிக்க வேண்டும்.

பாரம்பரிய மருந்து தொடர்பாக ‘பிரிக்ஸ்’ நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘பிரிக்ஸ்’ நாட்டு தலைவர்கள் சார்பில் மாநாட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில், தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்படுவதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தொற்றுநோய்கள் பரவலை தடுக்க மருந்துகள் கண்டுபிடிப்பதில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்