கிலோ ரூ.400 : தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகள் அணிந்த மணப்பெண்

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு தங்க நகைகளை தவிர்த்து, தக்காளியை அணிகலன்களாக அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Update: 2019-11-20 06:44 GMT
இஸ்லாமாபாத்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 400 ரூபாயை தாண்டியுள்ளது. கராச்சியில் செவ்வாய்க்கிழமை தக்காளியின் விலை சாதனை அளவை எட்டியது. கிலோ  ரூ.400-க்கு விற்கப்படுகிறது. 13-14 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி தரத்தைப் பொறுத்து ரூ.4,200-4,500 க்கு கிடைக்கிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தக்காளி விலை இவ்வாறு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், அந்த நாட்டைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்து உள்ளார்.

தனது திருமணத்திற்கு இளம் பெண் தங்க நகைகளுக்கு பதிலாக தலை, கழுத்து, கைகளில் தக்காளியை கோர்த்து நகைகளாக அணிந்துள்ளார். தனக்கு திருமண சீதனமாக 3 கூடை தக்காளி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மணப்பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்