டோக்கியோவில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கக் கோரி டோக்கியோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-11-26 11:03 GMT
டோக்கியோ,

மும்பையில் 2008 ஆம் வருடம் நவம்பர் 26 ஆம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர், சுற்றுலா பயணிகள் என மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் உயிருடன் பிடிபட்டான். பின்னர் அவன் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் செயல்படும் லக்‌ஷர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஹபீஸ் சயீத்  பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கும் தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியிருந்தார்.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த தாக்குதல் நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி இன்று அதன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாக்குதலில்  உயிரிழந்தவர்களுக்கு நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு குவிந்த இந்தியர்கள், ஹபீஸ் சயீதை கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர். ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மும்பை தாக்குதலின் போது  தொழில்முறை பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்த ஜப்பானைச் சேர்ந்த ஹிசாஷி சுடா என்பவர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாகிச்சூட்டில் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்