ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 15 தலீபான்கள் பலி - மற்றொரு மோதலில் 13 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 15 தலீபான்கள் பலியாகினர். மேலும் மற்றொரு மோதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-12-06 23:30 GMT
காந்தகார்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு காந்தகார், ஹெல்மாண்ட் மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து, உள்நாட்டுப்படைகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருவதாக தெரிய வந்தது.

இதையடுத்து காந்தகார் மாகாணத்தில் நேஷ் மாவட்டத்தில் தலீபான்கள் மறைவிடத்தைக் குறிவைத்து ராணுவ விமானங்கள் நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின. இதில் 9 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

இதேபோன்று ஹெல்மாண்ட் மாகாணத்தில் நாஹர் இ சரஜ் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே குண்டூஸ் மாகாணத்தில் ஜாய் பேகம் மற்றும் கிர்ஜிஸ் கிராமங்களில் போலீஸ் சோதனைசாவடிகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீஸ் படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். 3 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து குண்டூஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்