ஏமனில் பயங்கரம்: ராணுவ அணிவகுப்பில் ஏவுகணை வீச்சு; 5 பேர் பலி

ஏமனில் ராணுவ அணிவகுப்பில் நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சில் 5 பேர் பலியாகினர்.

Update: 2019-12-30 21:48 GMT
ஏடன்,

ஏமனில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டமைப்பு நாடுகளின் படைகள் களத்தில் இருக்கின்றன. இதற்காக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவ வீரர்கள் ஏமனில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஏமனில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் படையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கான பட்டமளிப்பு விழா தாலே மாகாணத்தின் அல் டாலி நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. விழாவின் நிறைவாக ராணுவ அணிவகுப்பு நடந்தது.

அப்போது, விழா நடந்த மைதானத்துக்குள் ஏவுகணை விழுந்து வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த ஏவுகணை தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் ஹவுதி கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலுக்கு காரணம் என ஏமன் அரசு குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் ஏமனின் ஏடன் நகருக்கு அருகே நடந்த ராணுவ அணிவகுப்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்