வெனிசூலாவில் பயங்கரம்: கரும்பு தோட்டத்தில் தீ விபத்து; 12 பேர் உடல் கருகி சாவு

வெனிசூலாவில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Update: 2020-01-24 22:50 GMT
கராக்கஸ்,

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவின் வடக்கு பகுதியில் உள்ள அரகுவா மாகாணத்தின் தலைநகர் மராகோவில் மிகப்பெரிய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை பராமரித்து வரும் விவசாய தொழிலாளர்கள் அங்கேயே குடில் அமைத்து, குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் தோட்டம் முழுவதிலும் பரவியது.

தோட்டத்தில் தங்கியிருந்த விவசாய தொழிலாளர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள குடும்பத்தினருடன் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதற்குள் தீ, நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் அவர்களில் சிலர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 3 சிறுவர்கள் உள்பட 13 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தோட்டத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்