ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிப்பு: ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி வான்தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

Update: 2020-01-26 22:28 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, லட்சக்கணக்கானோர் உயிர் பிழைப்பதற்காக பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர்.

எனவே இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாட்டு அரசு தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் பயங்கரவாதிகள் நாட்டில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் அமெரிக்க படைகளின் உதவியுடன் தரை வழியாகவும், வான்வழியாகவும் ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில் புகா என்ற கிராமத்தில் இருக்கும் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 16 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இது குறித்து வடக்கு பிராந்தியத்தின் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனீப் ரெசாய் கூறுகையில், “பயங்கரவாதிகளின் நிலைகள் மீது ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் அவர்களின் பதுங்கு குழிகள், வாகனங்கள் மற்றும் ஆயுதகிடங்குகள் ஆகியவை நிர்மூலமாக்கப்பட்டன” என்றார்.

மேலும் அவர், “இந்த தாக்குதலை தொடர்ந்து புகா கிராமத்தில் இருந்து பெரும்பாலான பயங்கரவாதிகள் வெளியேறிவிட்டனர். அதனை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் இருந்தும் பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இது தொடரும். பால்க் மாகாணம் உள்பட வடக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒழித்துக்கட்டப் படும்” என கூறினார்.

மேலும் செய்திகள்