ஈரானில் பரபரப்பு: ஓடுபாதையில் இருந்து விலகி நெடுஞ்சாலைக்கு வந்த விமானம்

ஈரானில் ஓடுபாதையில் இருந்து விலகி நெடுஞ்சாலைக்கு வந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-27 23:22 GMT
டெஹ்ரான்,

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து குஜெஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ஸ்ஹர் நகருக்கு காஸ்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் நேற்று காலை புறப்பட்டு சென்றது. விமானத்தில் 135 பயணிகள் இருந்தனர். மக்ஸ்ஹர் நகரை அடைந்த விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. விமானி உடனடியாக விமானத்தை நிறுத்த முயற்சித்தார்.

ஆனால் நிற்காமல் ஓடிய விமானம் விமான நிலையத்தையொட்டி உள்ள நெடுஞ்சாலைக்கு சென்றது. அங்கு தரையில் உரசி கொண்டே சென்ற விமானம் சிறிது தூரம் சென்ற பிறகு நின்றது. அதனை தொடர்ந்து விமானத்தின் அவசரகால வழியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் விமானத்தின் அடிபாகம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்