கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. பெய்ஜிங் நகரில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-01-28 02:33 GMT
பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 1,300 புதிய நோயாளிகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 4,515. இவர்களில் 2,567 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். 563 பேருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 127 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய இடங்களில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தாக்குதலால் இறப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு தலா ஒருவர் இறந்துள்ளனர். பெய்ஜிங் நகரில் இறந்த 50 வயதான நபருக்கு 22-ந் தேதி வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிந்தது. அவர் 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை உகான் நகரில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங்கில் இருந்து பக்கத்து நகரமான டியான்ஜின் இடையே நடைபெற்று வந்த ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெய்ஜிங்கில் உள்ள விமான நிலையம் மற்றும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் மிதமானது என்று தாங்கள் கணித்தது தவறு, அங்கு அச்சுறுத்தல் மிகவும் அதிகமான நிலையில் உள்ளது என்று ஒப்புக்கொண்டது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் பெய்ஜிங் நகருக்கு சென்று, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து சீன வெளியுறவு மந்திரி வாங்க் யி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கேப்ரியேசஸ் கூறியதாவது:-

உலக சுகாதார அமைப்பு சீன நாட்டினரை வெளியேறும்படி பரிந்துரைக்காது. சர்வதேச சமுதாயம் அளவுக்கு அதிகமாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தாமல் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டும். தொற்றுநோயை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் சீனாவுக்கு உள்ள திறனை உலக சுகாதார அமைப்பு நம்புகிறது.

வைரஸ் தாக்குதலுக்கு பின்னர் சீனா குறித்த நேரத்தில் அந்த கிருமியை அடையாளம் கண்டதுடன், கொரோனா வைரஸ் பற்றிய மரபணு தகவல்களை உலக சுகாதார அமைப்புடனும், பிற நாடுகளுடனும் பகிர்ந்துகொண்டது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு எடுத்துவரும் முயற்சிகளை உலகில் வேறு எங்கும் காண்பது அரிது. சீன அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

உகான் நகரில் உள்ள பல்கலைக்கழக மாணவி ஹப்சா, “பாகிஸ்தானை தவிர மற்ற நாடுகள் உகான் நகரில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை தனி விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பும்படி கேட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் மாணவர்கள் 500 பேரும், இதர பல்கலைக்கழகங்களில் மொத்தமாக சுமார் 2 ஆயிரம் பேரும் உள்ளனர். அவர்கள் அச்சத்தில் உள்ளனர்” என்று பேசி ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரியிடம் கேட்டபோது, “அந்த மாணவர்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், பாகிஸ்தான் மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்