ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

Update: 2020-02-11 23:00 GMT
காபூல், 

ஆப்கானிஸ்தான் தநைலகர் காபூலின் மேற்கு பகுதியில் ‘மார்ஷல் பாஹிம் ராணுவ அகாடமி’ என்ற பெயரில் ராணுவ பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த ராணுவ பல்கலைக்கழகத்துக்கு அருகே வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது. குண்டுவெடிப்பில் சிக்கி 3 ராணுவ வீரர்களும், அப்பாவி மக்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் 7 வீரர்கள் உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. காபூலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் நிகழாமல் அமைதி நிலவி வந்த சூழலில் தற்போது, ராணுவ பல்கலைக் கழகம் அருகே நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்