சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-02-12 01:20 GMT
பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது என தகவல்கள் வெளியாகின.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 8ந்தேதி வரை 723 பேர் பலியாகி இருந்தனர்.

இதன்பின் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமெரிக்கா பெண் (வயது 60) ஒருவரும், உகான் நகர மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஜப்பானை சேர்ந்த (வயது 60) ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.  இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானது உறுதியானது.

இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் 39 வயது நிறைந்த ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகினர்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 9ந்தேதி 81 பேர் உயிரிழந்தனர்.  பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்தது.  இதேபோன்று 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர்.  இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர்.  இந்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தது.

தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து 908 ஆனது.  நேற்று சீனாவில் கூடுதலாக 103 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்வடைந்தது.

இந்நிலையில், 94 பேர் உயிரிழந்து உள்ளனர் என இன்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்