ஈராக்கில் பரபரப்பு: அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-16 23:45 GMT
பாக்தாத், 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது.

ராணுவ தளபதியின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற வலியுறுத்தி ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று அதிகாலை ராக்கெட்டுகள் வீசப்பட்டன.

தூதரகத்தின் எல்லை சுவருக்கு மிக அருகில் அடுத்தடுத்து சில ராக்கெட்டுகள் விழுந்து வெடித்ததில் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.

எனினும் எத்தனை ராக்கெட்டுகள் வீசப்பட்டன, இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்பட்டதா, தூதரக கட்டிடம் சேதம் அடைந்ததா என்பவை உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த வியாழக்கிழமை ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்