கொரோனா வைரஸ் தாக்குதல்: சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-02-21 20:40 GMT
டோக்கியோ,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவி இருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீனாவில் பலியாகி இருக்கின்றனர்.

இவ்வாறு சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. அந்தவகையில் சீனாவுக்கு வெளியே 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் சீனாவுக்கு விமானம் இயக்குவதை நிறுத்தி உள்ளன. சீனாவும் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவதை குறைத்து உள்ளது. இதனால் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு 29 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சர்வதேச விமானப்போக்குவரத்து சங்கம் அறிவித்து உள்ளது. குறிப்பாக ஆசிய விமான நிறுவனங்களின் தேவை 13 சதவீதம் குறைந்திருப்பதாக அந்த சங்கம் அறிவித்து உள்ளது. அதுவும் ஆசிய விமான நிறுவனங்களின் வர்த்தகம் உச்ச நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த வருவாய் இழப்பு கவலை அளிப்பதாகவும் அது கூறியுள்ளது.

மேலும் செய்திகள்