பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் - அமெரிக்கா தகவல்

நாளை இந்தியாவுக்கு வரும்போது, பிரதமர் மோடியுடன் மத சுதந்திரம் பற்றி டிரம்ப் பேசுவார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Update: 2020-02-22 23:30 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நாளை (திங்கட் கிழமை) இந்தியா வருகிறார்.

இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “நம் இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான, நீடித்த உறவின் நிரூபணமாக ஜனாதிபதி இந்தியா செல்கிறார். ஜனநாயக மரபுகள், பொதுவான பாதுகாப்பு நலன்கள், இரு தரப்பு மக்கள் இடையேயான நீடித்த பிணைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நம் இரு நாட்டு உறவு அமைந்துள்ளது. மேலும் அதில் ஒரு பகுதி, நமது ஜனாதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் இடையேயான நெருக்கமான உறவை எடுத்துக்காட்டுகிறது” என கூறினார்.

அப்போது அவரிடம், “குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் விரிவாக பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவும், அமெரிக்காவும் ஜனநாயக பாரம்பரியம் மற்றும் மத சுதந்திரத்தை கொண்டுள்ள நாடுகள் ஆகும். இதுபற்றி பொதுவெளியில் டிரம்ப் பேசி உள்ளார். நிச்சயமாக தனி சந்திப்பின்போதும் பேசுவார்.

பிரதமர் மோடியை சந்திக் கிறபோது, ஜனாதிபதி இந்த பிரச்சினைகள் பற்றி பேசுவார்.

இது நமது நிர்வாகத்துக்கு மிக முக்கியமானது.

நமது உலகளாவிய மதிப்புகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் நமக்கு அர்ப்பணிப்பு உள்ளது.

இந்தியாவின் ஜனநாயக மரபு மற்றும் அமைப்புகள் மீது நமக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. இந்த மரபை இந்தியா நிலைநிறுத்துவதற்கு நாம் தொடர்ந்து ஊக்கம் அளிப்போம்.

மேலும் இந்தியா தனது ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்த வேண்டும், மத சிறுபான்மையினருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது.

நீங்கள் எழுப்பிய சில பிரச்சினைகளில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

மத சுதந்திரம் வேண்டும், மத சிறுபான்மையினர் மீது மரியாதை வேண்டும், அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

எனவே ஜனாதிபதி இந்த பிரச்சினையை எழுப்ப வேண்டியது முக்கியமான ஒன்று. நிச்சயமாக இது பேசப்படும்.

இந்தியா வளமான மதம், மொழி, கலாசாரம் ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். உண்மையை சொல்வதானால், உலகின் மிகப்பெரிய 4 மதங்கள் தோன்றிய நாடு இந்தியா.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது பேசிய முதல் பேச்சில், இந்தியாவில் மத சிறுபான்மையினரை உள்ளடக்கியவர்களாக இருக்கச்செய்வதற்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பார் என்பது பற்றி பேசினார்.

நிச்சயமாக இந்தியா மத சுதந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சி நடக்கிற நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்