ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணமடைந்தார்.

Update: 2020-02-26 22:22 GMT
டோக்கியோ,

உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 112. ஜப்பானின் நீகாடா நகரில் 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சிடேட்சு வடானபி தனது இளமை காலத்தை தைவானில் கழித்தார்.

அங்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், திருமணத்துக்கு பின் ஜப்பான் திரும்பினார். ஜப்பானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு 5 பிள்ளைகள், 12 பேரன்கள், 16 கொள்ளு பேரன்கள் உள்ளனர்.

இவரை உலகில் வாழும் மிக அதிக வயதுடைய ஆணாக கடந்த 12-ந்தேதி கின்னஸ் புத்தகம் தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கியது. இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற சாதனையை படைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாசோ நோனாகா, கடந்த மாதம் இறந்ததை தொடா்ந்து, சிடேட்சு வடானபிக்கு இந்த பெருமை கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டிருந்த சிடேட்சு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இதனை ஜப்பானில் உள்ள கின்னஸ் அமைப்பு நேற்று முன்தினம் தெரிவித்தது.

‘யார் மீதும் கோபப்படாமல், புன்னகையுடன் இருப்பதுதான்’ தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என சிடேட்சு வடானபி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்