அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடெனுக்கு முன்னாள் போட்டியாளர்கள் 3 பேர் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடெனுக்கு முன்னாள் போட்டியாளர்கள் 3 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-03-03 22:07 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய, அமெரிக்க மாகாணங்களில் கட்சி தேர்தல் நடந்து வருகிறது.

‘சூப்பர் டியூஸ்டே’ என அழைக்கப்பட்ட நேற்று அலபாமா, ஆர்கன்சாஸ், கொலராடோ, கலிபோர்னியா, மைனே, மசாசூசெட்ஸ், மின்னசோட்டா, வடக்கு கரோலினா, ஓக்லஹோமா, டென்னிசி, டெக்சாஸ், உட்டா, வெர்மாண்ட் மற்றும் வர்ஜீனியா ஆகிய 14 மாகாணங்களில் ஜனநாயக கட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெர்னீ சாண்டர்சுக்கும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

14 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களை கைப்பற்றுகிறவருக்குத்தான் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே ஜோ பிடெனுக்கு திடீரென 3 முன்னாள் போட்டியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆமி குளோபச்சர், பீட் பட்டிகீக், பெட்டோ ஓ ரூர்கே ஆவார்கள். மூவரும் ஜோ பிடெனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

மேலும் செய்திகள்