சிரியாவில் சண்டை நிறுத்தம்: ர‌ஷியா, துருக்கி அதிபர்கள் அறிவிப்பு

சிரியாவில் சண்டை நிறுத்தம் செய்வதாக ர‌ஷியா, துருக்கி அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2020-03-07 00:15 GMT
மாஸ்கோ,

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், சிரியா அரசு படைக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் அரசு படைக்கு ஆதரவாக ர‌ஷிய ராணுவம் அங்கு களத்தில் உள்ளது.

இதில், அரசு படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கிடையே அண்மையில் இத்லிப் மாகாணத்தில் சிரியா அரசு படைகள் நடத்திய வான்தாக்குதலில், துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். இதனால், துருக்கி மற்றும் சிரியா படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது.

இதன்காரணமாக இத்லிப் மாகாணத்தில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமென ர‌ஷியாவிடம் துருக்கி கேட்டுக்கொண்டது. மேலும் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் நேற்று முன்தினம் ர‌ஷியா சென்று, அந்த நாட்டு அதிபர் புதினை நேரில் சந்தித்து இதுபற்றி தீவிர ஆலோசனை நடத்தினார்.

சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இத்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த தயீப் எர்டோகனும், புதினும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். இது தொடர்பான உடன்படிக்கையில் இருவரும் கையெழுத்திட்டனர்.

இது குறித்து எர்டோகன் கூறுகையில் ‘‘இன்று (அதாவது நேற்று) நள்ளிரவு முதல், போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும். சிரியா அரசு படைகள் ஒருவேளை தாக்குதலில் ஈடுபட்டால், துருக்கி அமைதியாக இருக்காது. பதில் தாக்குதல் நடத்தும்’’ என்றார்.

மேலும் செய்திகள்