சிரியாவில் பயங்கரம்: டேங்கர் லாரி அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்து - 32 பேர் பலி

சிரியாவில் டேங்கர் லாரி ஒன்று அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகினர்.

Update: 2020-03-08 09:17 GMT
டமாஸ்கஸ்,

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரியில் பிரேக் பிடிக்காமல் போனது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 2 சொகுசு பஸ்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் லாரியில் இருந்த பெட்ரோல் டேங்கர் வெடித்து தீப்பிடித்தது. பின்னர் 2 பஸ்சுகளும் தீப்பிடித்து எரிந்தன.

இதற்கிடையே பெட்ரோல் டேங்கர் வெடித்து தீப்பிடித்த பிறகு நிற்காமல் ஓடிய லாரி, கார்கள் உள்பட சுமார் 15 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. பெட்ரோல் டேங்கரில் இருந்து அந்த வாகனங்களுக்கு தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த கோர விபத்தில் சொகுசு பஸ்களில் பயணம் செய்த ஈராக் நாட்டை சேர்ந்த பலர் உள்பட 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 77 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்