உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 3,595 ஆக உயர்வு: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்து உள்ளது. இந்த வைரசால் 1,05,836 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது.

Update: 2020-03-08 23:36 GMT
பாரீஸ்,

சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. சுமார் 100 நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் நாள்தோறும் புதிய நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது.

இந்த வைரசின் பிறப்பிடமான சீனாவில் மேலும் 27 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் அங்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்து விட்டது. அங்கு புதிதாக மேலும் 44 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,695 ஆனது.

அமெரிக்காவிலும் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு கடற்படை வீரர் ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் நாடு திரும்பிய அவர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது.

ஈரானில் இந்த கொடிய வைரசுக்கு மேலும் 49 பேர் பலியாகி விட்டனர். அங்கு இந்த வைரசுக்கு ஒரேநாளில் ஏற்பட்ட மிக அதிக உயிரிழப்பு இதுவாகும். இத்துடன் ஈரானில் 194 உயிர்கள் கொரோனா வைரசால் பறிபோய் இருக்கிறது. இதைப்போல ஒரே நாளில் 743 புதிய நோயாளிகளும் உருவாகி இருக்கின்றனர். மொத்த எண்ணிக்கை 6,566 ஆகி விட்டது.

தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஐ எட்டியுள்ளது. அங்கு நேற்று மேலும் 67 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7,134 ஆக உயர்ந்து விட்டது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 6 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்து உள்ளது. சுலோவேனியாவில் வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும் நிலையில் அங்கு 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் உள்ளரங்க பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அர்ஜெண்டினாவில் 64 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரசுக்கு பலியானார். இதன் மூலம் தென் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் முதல் பலி வாங்கியிருக்கிறது. ஈகுவடாரில் இருந்து வந்த 32 வயதான வாலிபர் ஒருவர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதன் மூலம், பராகுவேயிலும் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,595 ஆக உயர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,836 ஆக அதிகரித்து இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்