திரிபோலியில் குண்டுவீச்சு: ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் பரிதாப சாவு

திரிபோலியில் நடந்த குண்டுவீச்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-03-20 00:00 GMT
திரிபோலி,

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலி. இந்த நகரைக் கைப்பற்ற வேண்டும், ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற அரசை அகற்ற வேண்டும் என்று கிழக்கு பகுதியை சேர்ந்த போட்டி ராணுவம் முயற்சி செய்து வருகிறது.

இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். 1½ லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி சண்டை நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. ஆனாலும் சண்டை தொடர்கிறது.

திரிபோலியின் தெற்கே அயின்ஜாரா என்ற இடத்தில் நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இந்த 3 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. ஆதரவு பெற்ற அரசின் சுகாதாரத்துறை அமைச்சக தகவல் ஆலோசகர் அமீன் ஹஷேம் தெரிவித்தார்.

இதற்கிடையே சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதை ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு வரவேற்றுள்ளது.

மேலும் செய்திகள்