‘கொரோனா வைரஸ் இளையவர்களையும் விட்டுவைக்காது’ - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் இளையவர்களையும் விட்டுவைக்காது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-03-23 00:08 GMT
ஜெனீவா, 

உலகையே உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் முதியவர்களையும், இதய நோயாளிகளையும், நீரிழிவு நோயாளிகளையும், நுரையீரல் நோயாளிகளையும்தான் அதிகளவில் தாக்கும், இளையவர்களை தாக்காது என்று பரவலாக கருத்துகள் வெளியாகி வந்தன.

ஆனால் இந்த வைரசுக்கு இளையவர்கள், முதியவர்கள், நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள், ஆண்கள், பெண்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாரபட்சம் கிடையாது. இது எல்லோரையும் தாக்கும் வல்லமை படைத்தது என்பதுதான் மருத்துவ பூர்வமான உண்மை. இது அச்சுறுத்தல் அல்ல, இளைய தலைமுறையினர் உஷாராக இல்லாமல் போய், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தத்தான்.

இதையொட்டி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் முதியோரை கடுமையாக தாக்குகிறது. அதே நேரத்தில் இளையவர்களையும் அது விட்டு விடுவதில்லை.

இளையவர்களே, உங்களுக்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. கொரோனா வைரசை பொறுத்தமட்டில் நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல. இந்த வைரஸ் உங்களை வாரக்கணக்கில் ஆஸ்பத்திரிகளில் தள்ளி விடும். ஏன், அது கொல்லவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும்கூட, எங்கு செல்கிறீர்கள் என்பது குறித்த உங்களின் தேர்வு, வாழ்வுக்கும், மரணத்துக்கும் இடையேயான வித்தியாசமாக இருக்கலாம். கொரோனா வைரஸ் உருவான சீனாவின் உகான் நகரில் புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா வைரஸ் இப்போது தொற்றவில்லை என்று வெளியான தகவல், மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்துகூட மீள முடியும் என எஞ்சிய உலகத்துக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சமூக அளவில் தொலைவினை பராமரிப்பதற்கு பதிலாக ஒவ்வொருவரும் உடல் அளவில் தொலைவை பராமரிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறி உள்ளது.

இதையொட்டி, உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் மரிய கெர்கோவ் கூறுகையில், “பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் இணைப்பை ஏற்படுத்தி கொள்ளலாம். எப்படி என்றால், சமூக வலைத்தளங்கள் வாயிலாகத்தான். ஏனென்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு உங்கள் மன ஆரோக்கியமும் முக்கியம்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்