கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழப்பு அவசரநிலை நீட்டிப்பு

கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் உயிரிழந்து உள்ளனர்.இதை தொடர்ந்து அங்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-23 12:33 GMT
மாட்ரிட்

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 462 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திங்கள்கிழமை நிலவரப்படி பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 33,089ஐ எட்டியுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி, ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் முன்னதாக நேற்று 394 பேர் இறந்தது ஒரு நாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்பாக இருந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 462 இறப்புகள் பதிவாகி துயரத்தை ஏறபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினின் துணைப் பிரதமர் கார்மென் கால்வோ சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 வயதான கால்வோவிற்கு தற்போது கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள் வரை சுமார் 4,517 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.9,702 பாதிப்புகளுடன் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தலைநகர் மாட்ரிட் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியாக உள்ளது.

கேடலூன்யா 5,925 பாதிப்புகள் மற்றும் 245 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, பாஸ்க் நாடு 2,097 பாதிப்புகள் மற்றும் 97 இறப்புகளுடன் உள்ளது.

இதை தொடர்ந்து ஸ்பெயினில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அவசர நிலை ஏப்ரல் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் அறிவித்துள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மார்ச் 14ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமை 30 சதவீதம் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.இதனைக் கருத்தில் கொண்டு அவசர நிலையை மேலும் நீட்டிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்