உகான் நகரில் 2 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது

கொரோனா வைரசின் தாய் மண்ணாகக் கருதப்படும் சீன நாட்டின் உகான் நகரில், கடந்த 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று சகஜநிலை திரும்பியது.

Update: 2020-03-25 23:30 GMT
பீஜிங், 

உகான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹூபே மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். உகானில் மட்டும் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சீனா முடங்கிப்போனது.

9 வாரங்களாக அங்கு ஊரடங்கு அமலில் இருந்தது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதிவரை நீடித்து இருந்த ஊரடங்கு நேற்று தளர்த்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதிக்குப் பிறகு நேற்று உகான் நகரில் 30 சதவீதம் அதாவது 117 பஸ்கள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு பஸ்சிலும் ஒரு சுகாதார பாதுகாப்பு கண்காணிப்பாளர் இருந்தார். அவர் பயணிகளை சோதனை செய்த பிறகே பஸ்சில் ஏற அனுமதித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை காட்டும்விதமாக ஒவ்வொருவருக்கும் பச்சைநிற சுகாதார அட்டை வழங்கப்பட்டு இருந்தது. ஸ்மார்ட் போன் வைத்து இருந்தவர்கள் அதன்மூலம் அதை காட்டிய பிறகே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் சுகாதார அட்டையை காண்பித்து பஸ்சில் ஏறினார்கள்.

தற்போது ஹூபே, உகான் நகரங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்றும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 4 பேர் உயிர் இழந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர வெளிநாடுகளில் இருந்து சீனா சென்ற 47 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்