இத்தாலியில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா; ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

இத்தாலியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-31 12:10 GMT
ரோம்

கொரோனா வைரசால் இத்தாலியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், அங்கு தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 812 பேர் பலியானதை அடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 11,591 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பரவும் வீதம் 4.1 சதவீதமாக குறைந்திருப்பதாக அந்நாட்டின் குடிமக்கள் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இத்தாலியில் கொரோனாவின் மையமென கருதப்படும் வடக்கு லோம்பர்டியிலும், பாதிப்புகள் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,590 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் குணமடைந்தவர்களில் இதுவே அதிகபட்சம் என்றும் தெரிவித்துள்ளனர்.  

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது. இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 3ந்தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த  ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம் நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்