11 வாரங்களுக்கு பிறகு சீனாவின் உகான் நகரில் ஊரடங்கு தளர்வு

கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

Update: 2020-04-08 03:02 GMT
உகான்,

உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது. இதனால், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி உகான் நகரத்தைச் சீனா முடக்கியது. உகான் நகரில் இருந்து மக்கள் வெளியேறவோ, உகானுக்கு செல்லவோ முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர, பிற காரணங்களுக்கு வெளியில் வர அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு ஹூபெய் மாகாணத்தில் உள்ள பிற நகரங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 

சீனா எடுத்த தொடர் நடவடிக்கைகளால், அந்நாட்டில் கொரோனா பரவுவது கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில்  கொரோனா பரவத்தொடங்கிய காலத்திற்குப் பிறகு, நேற்று அங்கு முதல் முறையாகப் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. ஹூபெய் மாகாணத்தில் உள்ள பிற நகரங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டன. எனினும், உகான் நகரம் தொடர்ந்து முடக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், 76 நாட்களுக்குப் பிறகு சீனாவின் உகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து,  யாங்ட்சே நதிக்கரையில் திரண்ட மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக உகான் நகரிலிருந்து வெளியேறியதைக் காண முடிந்தது.

  மாஸ்குகள் அணிவது, வெப்ப நிலை பரிசோதிப்பது என்ற கொரோனா முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் உகான் நகரில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று ஹூபெய் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. உகான் நகரில் உள்ள ஆட்டோ மொபைல் தொழிற்சாலை உள்பட மிகப்பெரும் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைத் தொடங்கின.  எனினும், சிறிய மற்றும் நடுத்தர ரக  தொழில் கூடங்கள், பணியாட்கள் பற்றாக்குறையால் முழுமையாகச் செயல்படாத நிலை உள்ளது. 

மேலும் செய்திகள்