கொரிய எல்லையில் வடகொரியா, தென்கொரியா படைகள் மோதல்

கொரிய எல்லையில் வடகொரியா, தென்கொரியா படைகள் மோதிக்கொண்டன.

Update: 2020-05-04 00:15 GMT
சியோல், 

இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது.

2011-ம் ஆண்டில் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் பொறுப்பு ஏற்றது முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரம் அடைந்தது.

தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாகவும், தனது படை பலத்தை நிரூபிக்கும் வகையிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது.

இது ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறும் செயல் என்பதால் சர்வதேச அளவில் வடகொரியாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டது. ஆனாலும் வடகொரியா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு இந்த சூழல் மாறியது. தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் கலந்துகொண்டதன் மூலம் பரம எதிரிகளாக இருந்த இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பு உருவானது.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்து பேசினர். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறைந்தது.

ஆனால் இந்த இணக்கமான சூழல் ஒரு ஆண்டுகூட நீடிக்கவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என கிம் ஜாங் அன் அறிவித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் போக்கு உருவானது.

இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதென வரையறுக்கப்பட்ட கொரிய எல்லை பகுதியில் வடகொரியாவும், தென் கொரியாவும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய எல்லை பகுதியான சேர்வன் பகுதியில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7.41 மணிக்கு தென்கொரியா ராணுவ வீரர்கள் மீது வடகொரியா வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக தென்கொரியா ராணுவவீரர்களும் வடகொரியா வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். எனினும் இந்த மோதலில் இரு தரப்பிலும் யாருக்கும் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

அதேபோல் எதன் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதும் தெரியவில்லை. இது குறித்து அறிய வடகொரியா அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் வடகொரியா ராணுவம் தென் கொரிய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்துவது இதுவே முதல் முறை என்பதும், 20 நாட்களுக்கு பிறகு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பொதுவெளியில் தோன்றிய பின் இந்த தாக்குதல் நடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்