நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் - 20 பேர் உயிரிழப்பு

நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-05-11 23:30 GMT
நியாமி, 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை புகலிடமாக கொண்டு இயங்கிவரும் போகோஹரம் பயங்கரவாதிகள் அண்டை நாடுகளான நைஜர், சாத் ஆகிய நாடுகளிலும் காலூன்றி பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு, கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நைஜர் நாட்டின் வடக்கு பகுதியில் தில்லாபரி பிராந்தியத்தில் உள்ள கடாபோ மற்றும் கொய்ரா டெகுயோ கிராமங்களுக்குள் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். மோட்டர் சைக்கிள்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினர்.

இந்த கொடூர தாக்குதலில் கிராம வாசிகள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை கொன்று குவித்ததோடு மட்டும் இல்லாமல், அங்கிருந்த கடைகளை சூறையாடி கால்நடைகளையும் திருடி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்