“பயங்கரவாதிகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்த்து போராடுங்கள்” - மதத்தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பயங்கரவாதிகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்த்து நின்று போராட வேண்டும் என்று மதத் தலைவர்களுக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2020-05-13 21:11 GMT
நியூயார்க், 

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் இப்போது உலகின் 185-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி விட்டது. 43 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனற்ற நிலையில் 2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், கொரோனா வைரசால் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க மதத்தலைவர்களின் கூட்டம் நியூயார்க்கில் காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்த கூட்டத்துக்கான ஏற்பாட்டை ஐ.நா. சபைக்கான மொராக்கோ தூதர் உமர் ஹிலாலே ஏற்பாடு செய்திருந்தார். இதில் கத்தோலிக்க, யூத, இஸ்லாமிய மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பேசுகையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வருகிற இந்த நிலையில், பயங்கரவாதிகளும், பயங்கரவாத குழுக்களும் அரசை நிர்வகிக்கிற தலைவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அழிக்க முயற்சிக்கின்றனர். அத்துடன் மக்களை தங்கள் சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்.

துல்லியமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புகிறார்கள்.

இதன் காரணமாக இனவாதம், வெறுப்பு பேச்சு, மோதல்கள் ஏற்படுகின்றன. இதையொட்டி எழுந்துள்ள சவால்களை மதத் தலைவர்கள் எதிர்த்து நின்று போராட வேண்டும்.

மனித உரிமைகள், கண்ணியம், சமூக ஒத்திசைவு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் இடையே மதத்தலைவர்கள் ஓற்றுமையை ஏற்படுத்த வேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் சமூகத்தில் இதில் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும். அதுமட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முடிவு கட்டவும், மக்கள் சிறப்பாக குணம் அடையச் செய்யவும் தீர்வுகளை வழங்க முடியும்.

மேலும் மதத்தலைவர்கள் அனைத்து சமூகங்களும் இனவெறியை நிராகரிக்க செய்வதுடன், அகிம்சையை ஊக்குவிக்கவும் முடியும்.

இப்போது கொரோனா தொற்று நோய் பரவி வருவதற்கு மத்தியில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இத்தகைய சம்பவங்களை மதத்ததலைவர்கள் திட்டவட்டமாக கண்டிக்க வேண்டும்.

கூட்டாண்மை, சமத்துவம், மரியாதை, இரக்கம் ஆகியவற்றை ஆதரிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பாக பரவி வருகிற தவறான தகவல்களுக்கு எதிராக தங்களது சமூக தொடர்புகள் மூலம் மதத்தலைவர்கள் போராட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளபடி மக்கள் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை பராமரிப்பதின் அவசியத்தையும், நல்ல சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த வேண்டும்.

கொரோனா வைரசால் எழுந்துள்ள சூழ்நிலையையொட்டி வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரசால் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நடத்த வேண்டும். உடல் நல்லடக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்