கொரோனா பாதித்த 100 நாடுகளுக்கு உலக வங்கி ரூ.12 லட்சம் கோடி நிதி

கொரோனா வைரஸ் பாதித்த 100 நாடுகளுக்கு உலக வங்கி ரூ.12 லட்சம் கோடி நிதி உதவி வழங்குகிறது.

Update: 2020-05-20 23:30 GMT
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் உலகமெங்கும் 200 நாடுகளில் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்று 50 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. சுமார் 3¼ லட்சம் பேரை உயிரிழக்கவும் வைத்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. ஆனால் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து சாதனங்கள் முடக்கத்தால் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், வாஷிங்டனில் இருந்து தொலைபேசி வழியாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்குகள் உலகமெங்கும் 6 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிரச்சினையில் உலக வங்கி விரைவாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை மேற்கொள்கிறது.

கொரோனா வைரசால் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ள 100 நாடுகளில் அவசர கால நடவடிக்கைகளை எடுப்பதற்கு வகை செய்து உலக வங்கி 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) நிதி உதவி வழங்கும். இந்த 100 நாடுகள்தான் உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்தை தங்களிடம் கொண்டுள்ளன. 39 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன.

உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு திரும்ப வேண்டும் என்றால் அதற்காக சுகாதார அவசர நிலையை சமாளிக்க வேண்டும். ஏழைகளை பாதுகாக்க வேண்டும். தனியார் துறையை பராமரிக்க வேண்டும். பொருளாதார பின்னடைவை மீட்டெடுக்க வேண்டும். இதுதான் உலக வங்கியின் குறிக்கோள்.

அந்த வகையில்தான் உலக வங்கி 15 மாத காலத்தில் 160 பில்லியன் டாலரை வழங்க போகிறது. இது ஒரு மைல் கல் ஆகும்.

சுகாதார, பொருளாதார, சமூக அதிர்வுகளுக்கு திறம்பட பதில் அளிக்கும் வகையில் இந்த திட்டங்கள் நாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கவும் உதவும்.

இந்த திட்டத்தில் நன்கொடையாளர்கள் விரைவாக விரிவாக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன. நாங்கள் நன்கொடையாளர்களுக்கு இந்த விஷயத்தில் அழைப்பு விடுக்கிறோம். ஆர்வம் உள்ளவர்கள் உலக வங்கியை நாடலாம்.

உலகின் ஏழை நாடுகளுக்கு உலக வங்கி நிதி உதவி அளிக்கிற இந்த திட்டத்தில் சர்வதேச மேம்பாட்டு சங்கம் ஒரு பகுதி ஆகும்.

தங்கள் அரசாங்கங்களின் நிதி கடமைகளின் வெளிப்பாட்டுத்தன்மையை கணிசமாக அதிகரிப்பதற்கு நாடுகள் விரைவாக செயல்பட வேண்டும். இது முதலீட்டு கால நிலையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்காலத்தில் அதிக நன்மை பயக்கும் கடன் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்