அமெரிக்கா சென்று படிக்க இந்திய மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் படிக்க வரவேண்டும் என்று அந்த நாடு விருப்பம் தெரிவித்து சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.

Update: 2020-05-21 21:00 GMT
வாஷிங்டன்,

உலக நாடுகளிலேயே இந்தியர்களின் அறிவாற்றல் பாராட்டப்படுகிறது. பலராலும் விரும்பப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்தியர்களின் அறிவாற்றலை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் முக்கியமான பணிகளில் இந்தியர்கள் அமர்த்தப்படுவது வழக்கமாகி வருகிறது.

அங்கு இந்திய மாணவர்கள் சென்று உயர்படிப்பு படிப்பதும் அதிகரித்து வருகிறது. அங்கு சீனர்களுக்கு அடுத்த படியாக இந்திய மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் உயர்படிப்பு படித்து வருகிறார்கள். தற்போது அங்கு 2 லட்சம் இந்திய மாணவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வாஷிங்டனில் அட்லாண்டிக் கவுன்சில் சார்பில் இணையதளம் வழியாக ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று படிக்க அந்த நாடு சிவப்பு கம்பளம் விரிப்பது தெரிய வந்தது.

இந்த கலந்துரையாடலில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ரிச்சர்டு வர்மா கலந்து கொண்டார். அவரிடம் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் பேசும்போது, இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வந்து படிக்க விரும்புகிறோம் என விருப்பம் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வருவது ஒரு விதமான பதற்றத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கி இருக்கிறது. ஆனால் இந்திய மாணவர்கள் படிப்புக்காக அமெரிக்கா வரவேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் விரும்புகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விசாக்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே விசா வழங்குவது ஒரு பிரச்சினையாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இது இந்த கல்வி ஆண்டு முழுவதும் (ஆகஸ்டு மாதம் வரை) நீடிக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை பொறுத்தமட்டில், அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் இடையே கவலையும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மாறுகிறபோது, இந்திய மாணவர்கள் உயர் கல்வி பெற இங்கு வருவதை உறுதி செய்வோம். அவர்களுக்கு முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து தருவோம். கடந்த ஆண்டு இந்திய மாணவர்கள் 2 லட்சம் பேர் படிக்க வந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும். திறந்த மனதுடன் நாங்கள் அவர்களது குறிக்கோள்களுக்கு மத்தியில் தூதர்களாக செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்