சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழருக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2020-05-21 22:00 GMT
சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக காணொலி காட்சி மூலம் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

சிங்கப்பூரை பொறுத்த அளவில் போதைப்பொருள் கடத்துவது மற்றும் வைத்திருப்பது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்த நாட்டு கோர்ட்டு சிறிதளவும் சகிப்புத்தன்மையை காட்டாது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டங்கள் அங்கு கடுமையான உள்ளன. போதைப்பொருள் வழக்கில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக மலேசியாவை சேர்ந்த தமிழர் புனிதன் கணேசன் (வயது 37) என்பவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் மீது அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் புனிதன் கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

எனினும் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிங்கப்பூர் கோர்ட்டுகள் அனைத்து மூடப்பட்டுள்ளன.

ஆனால் மிக முக்கியமான வழக்குகள் மட்டும் ‘ஜூம்’ என்ற செயலி மூலம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புனிதன் கணேசன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜூம் செயலி மூலம் தீர்ப்பு வழங்கினார். அப்போது அவர் புனிதன் கணேசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலின் வாதங்கள் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது என்று சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புனிதன் கணேசன் சார்பில் ஆஜரான வக்கீல் பீட்டர் பெர்னாண்டோ இதுகுறித்து கூறும்போது, ‘இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். விரைவில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வோம்’ என்றார்.

சிங்கப்பூர் வரலாற்றிலேயே காணொலி காட்சி வழியாக ஒரு குற்ற வழக்கில் மரண தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும். அதே நேரத்தில் ஜூம் செயலி மூலம் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்