கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு மக்கள் பழகி விட வேண்டும் - சிங்கப்பூர் பிரதமர்

கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு மக்கள் பழகி விட வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் கூறி உள்ளார்.

Update: 2020-06-08 22:14 GMT
* ஆப்கானிஸ்தானில் மத்திய லோகர் மாகாணத்தின் முகமது ஆகா மாவட்டத்தில் 2 சகோதரிகளை தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை போலீஸ செய்தி தொடர்பாளர் ஷபூர் அகமத் ஜாய் உறுதி செய்தார். எனினும் கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

* சிங்கப்பூரில் பெண்களின் உள்ளாடைகளை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ள லீ சீகின் என்ற வாலிபர் பிடிபட்டார். கொரோனா வைரஸ் தடுப்பு பொதுமுடக்க காலத்திலும் இவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி உள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தனது செயல் விதித்திரமான பொழுதுபோக்கு என கூறினார். அதை நீதிபதி ஏற்கவில்லை. அவருக்கு 23 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது செயல் அற்பமானது என நீதிபதி குறிப்பிட்டார்.

* ரஷியாவில் சைபீரியாவில் ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில், மின்நிலைய எரிபொருள் தொட்டி உடைந்து விழுந்து பெருமளவில் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆற்றின் நிறம் சிவப்பானது. இந்த எண்ணெய் படலத்தை நீக்குவதற்கு அமெரிக்கா உதவத்தயார், இதில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்குவோம் என அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் ஒரு பதிவில் கூறி உள்ளார்.

* கனடாவில் உள்ள மக்கள் கொரோனா பரவலுக்கு எதிரான பொதுமுடக்க காலத்தில் மதுபானங்கள், புகையிலை, நொறுக்கு தீனிகள் ஆகியவற்றை அதிகளவில் சாப்பிடுவது ஒரு கருத்துகணிப்பில் அம்பலத்துக்கு வந்துள்ளது. இவற்றை விட்டு விட்டு ஆரோக்கியமான உணவுகளை மக்கள் சாப்பிட வேண்டும் என்று பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் அறிவுறுத்தி உள்ளார்.

* கொரோனா வைரஸ் தடுப்பூசி பரவலாக அனைவருக்கும் கிடைப்பதற்கு ஒரு வருடம் ஆகும்; எனவே இந்த வைரசுடன் வாழ்வதற்கு மக்கள் பழகி விட வேண்டும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் கூறி உள்ளார்.

* உள்நாட்டுப்போரால் நிலைகுலைந்துள்ள சிரியாவில் நாணய மதிப்பு மிகவும் சரிந்துள்ளது. சிரியா பவுண்ட் ஒன்றின் மதிப்பு 0.002 அமெரிக்க டாலராக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருவதாலும், ஊழல் பெருகி வருவதாலும் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக தென்மேற்கு சிரியாவில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்தோனேசியாவில் பாலி தீவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 29 வயது வாலிபர் ஜேக்கப் ராபர்ட்ஸ் என்பவரை நாய் துரத்தி உள்ளது. இதில் அவர் ஓட்டம் எடுத்ததில், அங்குள்ள கிணற்றில் விழுந்தார். 6 நாட்களுக்கு பின்னர் இப்போது அவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே நேரத்தில் தண்ணீர் மிக குறைவான அளவில் இருந்த நிலையில் அவர் கிணற்றில் குதித்ததில் அவரது கால் முறிந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

* கிழக்கு ஜெருசலேமில் ஆட்டிசம் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இயாத் ஹலாக் என்ற வாலிபரை இஸ்ரேல் போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர். தங்களது உத்தரவுக்கு அவர் கீழ்ப்படியவில்லை என்று போலீசார் இந்த விபரீதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடிய செயல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மவுனம் காத்து வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ இது ஒரு துயரம் என்று இப்போது கருத்து தெரிவித்து இருக்கிறார். இதில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்