மாலியில் அதிபர் பதவி விலக கோரிக்கை வலுக்கிறது

ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவி விலக வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-06-20 22:09 GMT
பமாகோ,

ஆப்பிரிக்க நாடான மாலியில் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா (வயது 75), கடந்த 2013-ம் ஆண்டு முதல் அதிபர் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகளாலும், உள்ளூர் இன குழுக்களாலும் அடிக்கடி வன்முறைகள் அரங்கேறி அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

அங்கு அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அதிபர் பதவி விலகவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய அரசு அமைக்க அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா முன்வந்துள்ளார். இதையொட்டி இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெற்றது. ஆனாலும், நேற்று முன்தினம் தலைநகர் பமாகோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து, அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள் அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட கோரிக்கை அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர் செக் ஓமர் சிசாகோ, இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், அதிபர் பதவி விலகும்வரை மக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளன. இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம், கடந்த 5-ந் தேதியன்றும் பமாகோவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்